49ஆவது தலைமை நீதியரசராக பத்மன் சூரசேன பதவியேற்பு

1 month ago


உயர் நீதிமன்றத்தின் மிக மூத்த நீதியரசரான பிரீத்தி பத்மன் சூரசேன, இலங்கையின் 49ஆவது தலைமை நீதியரசராக இன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றார்.


அவரது பதவியேற்பை குறிக்கும் ஒரு சம்பிரதாய அமர்வு வரும் வியாழக்கிழமை (ஜூலை 31) காலை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும்.


நீதியரசர் சூரசேன இலங்கை சட்டக் கல்லூரியில் நுழைவதற்கு முன்பு 1985 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். அவர் 1989 இல் சட்டத்தரணியாகப் பதவியேற்றார். சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக தனது சட்ட வாழ்க்கையைத் தொடங்கினார்.


 2007ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்பட்டார். 2016ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட அவர், 2018 ஜனவரி 15ஆம் திகதி முதல் 2019 ஜனவரி 9ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசராக பதவியுயர்வு பெறும் வரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

நீதியரசர் சூரசேன தனது நீதித்துறை வாழ்க்கையில் பல உயர்மட்ட வழக்குகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.


இதேவேளை, 1988ஆம் ஆண்டு முதல் 37 ஆண்டுகளாக ஆரம்ப நீதிமன்ற நீதிபதி, நீதிவான், மாவட்ட நீதிபதி, மேல் நீதிமன்ற நீதிபதி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர், உயர் நீதிமன்ற நீதியரசர் என நீதிச் சேவையில் உள்ள நீதியரசர் மகிந்த சமயவர்த்தன, நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நீதிபதிகள் பயிற்சிக் கல்லூரியின் இயக்குநராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.